மேட்டுப்பாளையத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்திவந்தவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இன்று காலை நடந்த இந்த கோர சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதையடுத்து விபத்துக்கு காரணமான சுவற்றை அமைத்த சிவ சுப்பிரமணியன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க உயிரிழந்தவர்களின் உறவினர்களும், ஊர் மக்களும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் உயிரிழந்தவர்களின் உடலை வாங்கவும் மறுப்பதால் போலீசார் போராட்டம் நடத்துபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில் போராட்டம் நடத்தியவர்களில் சிலர் கோயம்புத்தூர் மாவட்ட காவல் ஆணையர் சுஜித் குமாரின் சட்டையை பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை சரமாரியாக லத்தியாலும், கைகளாலும் அடித்து உதைத்தனர். எனினும் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி வந்த ஊர் மக்களால் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.